மாணவர்களுக்கு காமராஜர் விருது
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற, 1,140 மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் காமராஜர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற தலா, 15 பேர் என, 38 மாவட்டங்களை சேர்ந்த 1,140 பேர், காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா, 20,000 ரூபாய்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா, 10,000 ரூபாய், விருதுடன் பரிசாக வழங்கப்பட உள்ளது. பரிசுத் தொகையாக, 1.71 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.