மொழிபெயர்ப்பு நுால்கள் வெளியீடு
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களுடைய, சிறந்த படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு நுால்களை, அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்.சென்னை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், 2022 - 23ம் ஆண்டின் சிறந்த எழுத்தாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், 2022 - 23ம் ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்கள், 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் படைப்புகளை நுால்களாக வெளியிட, முதல் தவணை நிதியுதவியாக தலா 50,000 ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் கயல்விழி வழங்கினார்.முதல்வர் அறிவிப்பின்படி, நான்கு சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. அந்நுால்களை அமைச்சர் கயல்விழி வெளியிட, துறை செயலர் லட்சுமி பிரியா பெற்றுக் கொண்டார்.மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில், பணியின்போது இறந்த 11 பேரின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.