இடமாறுதல்: செவிலியர்கள் அதிருப்தி
மதுரை: முறையான இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தி அரசு செவிலியர்கள் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அரசு மருத்துவத்துறையில் காலியிடங்களில் சீனியாரிட்டிபடி பணியாற்றும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அளிப்பர். அதன்பின் ஏற்படும் காலியிடங்களில் நிரந்தர செவிலியர்களுக்கு இடமாறுதல் அளிப்பர். அதன்பின் எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தர கலந்தாய்வு நடத்துவர்.இம்முறையில் கலந்தாய்வை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர் சங்கத்தினர் மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குனரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். இயக்குனர், அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களிடம், செவிலியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும். கடந்தாண்டு நவம்பரில் நடந்ததால் அடுத்த ஓராண்டுக்கு பின்பே அக்கலந்தாய்வை நடத்த முடியும் என தெரிவித்தார்.இயக்குனர் கூறிய இந்த வழிகாட்டுதல் செவிலியர்களுக்கு பொருந்தாது என்று கூறிய நிர்வாகிகள், அதற்கான அரசாணையை அவரிடம் எடுத்துக் காட்டினர். பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்காததால், பணிமூப்பில் உள்ளவர்கள் தென்மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்றார் மாநில செயற்குழு உறுப்பினர் வசந்தி.