உள்ளூர் செய்திகள்

திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.பொள்ளாச்சி அருகே, பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மாணவர்கள் மரியாதை செலுத்தினர். திருக்குறளில் உள்ள, 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், திருவள்ளுவர் சிலைக்கு முன், 133 நிமிடங்கள் அமர்ந்து திருக்குறளை எழுதினர்.மாணவர்கள் எழுதிய திருக்குறளை வாசித்தும், ஒப்புவித்தும் செய்தனர். இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வை தமிழாசிரியர் பாலமுருகன் ஒருங்கிணைத்தார்.பில்சின்னாம்பாளையம் அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் சார்பில், திருவள்ளுவர் தினவிழா நடந்தது. அமைப்பின் நிறுவனர் அம்சபிரியா தலைமை வகித்தார். அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.பல்வேறு துறை ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ்குமார் வழங்கினார்.ஆண்டுதோறும், 1,330 திருக்குறள்களை பார்த்து எழுதும் மாணவர்களுக்கு திருக்குறள் ஆர்வலர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டு, 35 மாணவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருதினை எழுத்தாளர் ஆனந்தி வழங்கினார். ஓவியப்போட்டியில், மாணவி பவதாரணி முதல் பரிசு பெற்றார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.முல்லை வாசிப்பு மையம் மாணவர்கள் வழங்கிய நாடகம், பாடல், கராத்தே ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த மையத்தின் பொறுப்பாளர் ஹரிப்பிரியா, வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் பேசினார். அறிவொளி வீராசாமி கலை பாடல்களை பாடினார். அமைப்பாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்