வேலைவாய்ப்புக்கு உதவும் பட்ஜெட்
திருப்பூர்: “மத்திய பட்ஜெட் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு வழி வகுப்பதாக உள்ளது” என்று ஆடிட்டர் ராமநாதன் கூறினார். மத்திய பட்ஜெட்டை திருப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர்கள் வரவேற்றுள்ளனர்.வருமான வரி தாக்கல் எளிதாகும் ராமநாதன், ஆடிட்டர்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது, பொய்யான கணக்கு காட்டினால், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவ செலவுகளுக்காக, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்துக்கான டி.சி.எஸ்., வரி 5 சதவீதம் என்பது, 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய, ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.வருமான வரி கணக்கு தாக்கலும் எளிதாகப் போகிறது. வாகன விபத்துக்கான இழப்பீட்டு தொகைக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி பிடித்தம் தொடர்பாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி கடனுக்கான வட்டி 5 சதவீதம், 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 'கார்ப்பரேட் மித்ரா' என்ற தொழில் முனைவோர் அமைப்பு, 2 மற்றும் 3வது நிலை நகரங்களில் ஏற்படுத்தப்படுவது வரவேற்புக்குரியது. குறு, சிறு தொழில்துறையினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இவ்வமைப்பு வழிகாட்டும்.தொழிலாளருக்கு சிறந்த பயிற்சி தனஞ்செயன், ஆடிட்டர்: மத்திய பட்ஜெட், ஜவுளித்துறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வந்துள்ளது. பாரம்பரிய ஜவுளி தொழில் பகுதிகளில் இயந்திரங்கள் மேம்படுத்துதல், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பரிசோதனை வசதிகள் கிடைக்கும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியை ஊக்குவிப்பதால், சர்வதேச சந்தையில் போட்டியிட மிகவும் உதவும்.'சமர்த் - 2.0' திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் சிறந்த பயிற்சி பெறுவர்; இதனால் தரமும் உற்பத்தி திறனும் உயரும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, வங்கி கடன்களுக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை கொடுக்கும். நிதி வசதி, கடன் உத்தரவாதம் மற்றும் பெற வேண்டிய தொகையை விரைவில் பணமாக மாற்றும் வசதிகள் ஆகியவற்றால், சிறு தொழில்கள் பணம் பெற காத்திருக்க வேண்டிய நிலை குறையும்.பொருளாதாரம் சிறக்க பட்ஜெட் 'மைல் கல்' செந்தில்குமார், முன்னாள் தலைவர், திருப்பூர் ஆடிட்டர்கள் சங்கம்: இந்திய பொருளாதாரம் 'விக் ஷித் பாரத் 2047' ஐ நோக்கி நகரும் பயணத்தில், இந்த பட்ஜெட் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு பெருக்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளது.குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது பயனளிக்கும். வரிச் சட்டங்களைப் பொறுத்தவரையில் சட்டங்களை எளிமைப்படுத்துதல் மற்றும் சட்டத்தின் மூலம் ஏற்படும் வழக்குகளை குறைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. புதிய வருமானவரி சட்டம், ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.வெளிநாடுகளுக்கு சுற்றுலா, கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி பிடித்தம் இரண்டு சதவீதமாக குறைக்கப்படுகிறது. வருமான வரி பிடித்தம் செய்யாமல் இருக்க தானியங்கி முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.கணக்கு தணிக்கைக்கு உட்படாத தொழில் முனைவோருக்கான வருமானவரி தாக்கல் தேதி ஜூலை 31ல் இருந்து ஆக., 31ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் தணிக்கை செய்யத் தவறினாலோ அல்லது தாமதமாக தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தாலோ, 75 ஆயிரம் ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும்.வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேல் முறையீடு செய்யப்படும் வழக்குகளில் வரி செலுத்துவதை நிறுத்தி வைக்க 20 சதவீதத்திற்கு பதிலாக 10 சதவீத வரி செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது.குறைவான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.