பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 820 மாணவ, மாணவியர், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், 3ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் நரசிம்மன் உத்தரவுப்படி, உடற்கல்வி ஆசிரியை விஜயலட்சுமி மூலம், பள்ளி அளவிலான செஸ்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 3 முதல், 5ம் வகுப்பு மாணவியருக்கான பிரிவில், ஜனனி மற்றும் சமுத்திரா என இருவர் முதலிடம் பெற்றனர். மாணவர்கள் பிரிவில், சக்திதரன், டிவிலியர் முதலிடம் பெற்றனர். 6 முதல் 8ம் வகுப்பு பிரிவில், மாணவர்கள் அஸ்வித், அஸ்வின் முதலிடமும், மாணவியர் பிரிவில், மதுஸ்ரீ, மேத்தா முதலிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியர் பொன் நாகேஷ், பரிசு வழங்கி பாராட்டினார். வெற்றி பெற்ற, 8 மாணவ, மாணவியரும், இன்று காரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் நடக்கும், ஒன்றிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.