உள்ளூர் செய்திகள்

ஐ.எஸ்.சி., பாடத்திட்டத்தின் சிறப்பு

10ம் வகுப்பு வரை படித்த பிறகு, மாணவர்களின் கல்விப் பயணம் ஒரு முக்கியமான திருப்பத்தைச் சந்திக்கிறது. அடுத்து எந்தத் துறையைத் தேர்வு செய்வது? அறிவியலா, வணிகமா, மனிதநேயப் பாடங்களா? எதிர்காலத்தில் எந்தப் படிப்புக்குச் செல்லலாம்? இத்தகைய கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் கட்டம்தான் பிளஸ் 2. அந்த நிலையில் முக்கியமான ஒரு கல்விப் பாடத்திட்டமாக இருப்பது ஐ.எஸ்.சி. (ISC - Indian School Certificate).ஐ.எஸ்.சி. என்பது இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) நடத்தும் 12-ம் வகுப்பு அளவிலான பள்ளி இறுதித் தேர்வு. ஐ.சி.எஸ்.இ.யில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் மட்டுமல்லாமல், ஐ.எஸ்.சி. பாடத்திட்டத்தை வழங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இதில் பங்கேற்கலாம்.தேர்வு செய்யும் வாய்ப்புபிளஸ் 2வில் மாணவர்களுக்கு தங்களுடைய ஆர்வத்துக்கும் எதிர்காலத் திட்டத்துக்கும் ஏற்ற பாடங்களைத் தேர்வு செய்வது முக்கியமானதாகிறது. அறிவியல், கணிதம், வணிகம், பொருளாதாரம், கணினி, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை உள்ளடக்கிய விரிவான பாடத் தேர்வுகள் இதில் உள்ளன.இதன் மூலம் ஒரு மாணவர் தனது எதிர்காலக் கல்விப் பாதைக்கு தேவையான பாடங்களைத் திட்டமிட்டு தேர்வு செய்ய முடியும். மருத்துவம், பொறியியல், வணிகம், சட்டம், சமூக அறிவியல், கலை உள்ளிட்ட பல துறைகளுக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள், தங்களுடைய இலக்குக்கு ஏற்ப பள்ளி வழங்கும் பாடத் தேர்வுகளைப் பரிசீலிக்கலாம்.ஆழமான கற்றல்பிளஸ் 2 என்பது வெறும் அதிகமான பாடங்களைப் படிக்கும் காலம் அல்ல. ஒரு துறையைத் தேர்வு செய்த பிறகு, அதில் உள்ள கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டமும் இதுதான்.உதாரணமாக, அறிவியல் படிக்கும் மாணவர் ஒரு சூத்திரத்தை மனப்பாடம் செய்வதைத் தாண்டி, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரம் படிக்கும் மாணவர் ஒரு வரையறையை மனப்பாடம் செய்வதைத் தாண்டி, அது நிஜ வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற அணுகுமுறை உயர்கல்விக்கான அடித்தளத்தை அமைக்கிறது.மொழியும் கருத்தும்ஐ.எஸ்.சி.,யில் ஆங்கில மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் பாட அறிவை மட்டும் பெற்றால் போதாது; அதைத் தெளிவாக எழுதவும், விளக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.கல்லுாரிக் கல்வியில் ஆய்வுக் கட்டுரைகள், அறிக்கைகள், விளக்கக்காட்சிகள், கருத்துப் பகிர்வுகள் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளிப் பருவத்திலேயே வாசிப்பு மற்றும் எழுதும் திறனை வளர்த்துக்கொள்வது மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.எதிர்காலத்தை நோக்கிபிளஸ் 2 முடிவு என்பது பள்ளிக் கல்வியின் முடிவு மட்டுமல்ல; உயர்கல்விக்கான நுழைவாயிலும் கூட. எனவே பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யும்போது, “எது பிரபலமானது?” என்பதைவிட, “எனது ஆர்வம் என்ன? நான் செல்ல விரும்பும் உயர்கல்விப் படிப்புக்கு என்ன பாடங்கள் தேவை?” என்பதையே மாணவரும் பெற்றோரும் முதலில் பார்க்க வேண்டும்.ஐ.எஸ்.சி., போன்ற பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்களை அறிமுகப்படுத்துவதோடு, ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமாகச் செல்லும் வாய்ப்பையும் உருவாக்குகின்றன. சரியான பாடத் தேர்வு, திட்டமிட்ட படிப்பு, புரிந்துகொள்ளும் அணுகுமுறை ஆகியவை இணைந்தால், பிளஸ் 2 கல்வி அடுத்த கட்டப் பயணத்துக்கான வலுவான அடித்தளமாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்