மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சிதம்பரம்: குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில், பொது தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்கு சமூக ஆர்வலர்கள், வர்த்தக சங்கம் சார்பில் பல்வேறு நலப்பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், நடந்து முடிந்த பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். பிளஸ் 2 பொது தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி கனிமொழிக்கு ரூ.10 ஆயிரமும், 10ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் தீபக்குமாருக்கு ரூ.7,000 தொகையை, குமராட்சி வர்த்தக சங்க தலைவர் தமிழ்வாணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், ஆசிரியர்கள் பாலசுப்ரமணியன், அருணா, ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.