அரசு பள்ளியில் 1 - 12 வரை படித்தால்தான் உள் ஒதுக்கீடு
புதுச்சேரி: அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு மட்டுமே, மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை பின்பற்றி, புதுச்சேரியிலும் மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அதனைத் தொடர்ந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்தது. அதனை யொட்டி, நேற்று முன்தினம் அமைச்சரவையை கூட்டி, மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழக்க ஒப்புதல் அளித்து, கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதல்வர் அறிவித்தார். இந்த உள் ஒதுக்கீடு, மாநிலத்தில் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தகவலை முதல்வர் ரங்கசாமி நேற்று தெரிவித்தார்.