உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வித் துறையில் 113 பேருக்கு கருணை பணி நியமனம்

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில், பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 113 பேருக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அலுவலக உதவியாளர் பணிக்கு 70 பேர், இரவுக் காவலர் பணிக்கு 18 பேர், துப்புரவாளர் பணிக்கு 25 பேர் என 113 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார். விழாவில் தங்கம் தென்னரசு பேசுகையில், “பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் மட்டும் 60 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே துறையில் கருணை அடிப்படையில் ஏற்கெனவே 270 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 113 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில் மேலும் 320 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதிலும் இருந்து கருணை அடிப்படையில் வேலை கேட்டு ஆயிரத்து 275 பேர் மனு செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார். முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி வரவேற்றார். துறைச் செயலர் குற்றாலிங்கம் உட்பட துறையின் உயர் அதிகாரிகள் பலர் விழாவில் கலந்துகொண்டனர். அரை குறை ஏற்பாடு: டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள ஸ்டூடியோவில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மிகச் சிறிய அறையில் 113 பேரையும் உட்கார வைக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடினர். முதலில் சேரைப் போட்டனர். அப்படி போட்டால் 50 பேர் கூட உட்கார முடியாது என்பது தெரிந்ததும், சேரை எடுத்துவிட்டு சிறுவர்கள் அமரக்கூடிய பெஞ்ச்சை போட்டனர். அதில் பலரையும் நெருக்கமாக உட்கார வைத்தனர். அப்படியிருந்தும் 30க்கும் மேற்பட்டோரை அரங்கிற்குள் உள்ள தடுப்புப் பலகையின் பின்னால் உட்கார வைத்தனர். வளாகத்தில் திறந்தவெளி இடத்திலேயே விழாவை ஏற்பாடு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சில அதிகாரிகள் முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்