உள்ளூர் செய்திகள்

ராகிங்கை தடுக்க 2 மாதங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: துணைவேந்தர் தாண்டவன்

சென்னை: யு.ஜி.சி., உத்தரவுப்படி, சென்னை பல்கலை வளாகங்களில், ராகிங்கை தடுக்க, இரண்டு மாதங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என, சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்தார். சென்னை பல்கலையின் செனட் கூட்டம், கடந்த சனிக்கிழமை நடந்தது. அதில், பல்கலைக்கு கிடைத்த நாக் குழு அங்கீகாரம்; இணையதளம் மூலமான மறுமதிப்பீடு; தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவித்தல் போன்ற செயல்பாடுகள், பல்கலையில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், சுயநிதி கல்லுாரிகளை முறைப்படுத்த குழு அமைக்கப்பட வேண்டும்; ஒரே கல்லுாரியில் இரு முதல்வர்கள் இருப்பதை தடுக்க, உரிய வரைமுறைகளை உருவாக்க வேண்டும்; பல கல்லுாரிகளின் பாடங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்; நாளந்தா பல்கலையை மீட்டுருவாக்கம் செய்தது போல், பழமையான காஞ்சி பல்கலையை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன. உயர்கல்வி நிறுவனங்களில், ராகிங்கை தடுக்கும் விதமாக, எச்சரிக்கை மணி, ரகசிய கேமராக்கள் பொருத்துதல்; கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கும்படி, கடந்த ஏப்ரல் மாதம், பல்கலை மானியக் குழு அறிவுறுத்தல்களை சுற்றறிக்கையாக வெளியிட்டது. இதுகுறித்து, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, செனட் கூட்டத்தில் சென்னை பல்கலை துணைவேந்தர் தாண்டவன் கூறியதாவது: சென்னை பல்கலையின் சேப்பாக்கம் வளாகத்தில், ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. தரமணி நுாலக கட்டடத்தில் உள்ள, மாணவியர் விடுதியிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், சமீபத்தில், யு.ஜி.சி., ராகிங் தடுப்பிற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்கலையின் அனைத்து வளாகங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, யு.ஜி.சி.,க்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், அறிவியல் ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள், இங்கு தங்கி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில், வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்