உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 புத்தகத்தில் சீன ஆக்கிரமிப்பு குறித்த பாடம்

பிளஸ் 2 வகுப்புக்கான பாடப்புத்தகத்தில், சீன ஆக்கிரமிப்பு குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கான புத்தகங்கள் மற்றும் பயிற்சிகளை, என்.சி.இ.ஆர்.டி., எனும் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி குழு வழங்குகிறது.சமீப காலமாக, வெளிநாடுகளுடனான உறவு, போர்கள் பற்றிய தகவல்கள், பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதன்படி, தற்போது பிளஸ் 2 அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில், சமகால உலக அரசியல் போக்கு என்ற பாடத்தில், 'ஆசாத் பாகிஸ்தான் என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் என்றும், அது, பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்திய பகுதி' என்றும் மாற்றப்பட்டுள்ளது.மேலும், 'பெரும்பாலான மாநிலங்களுக்கு சமமான அதிகாரங்கள் இருந்தாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சில மாநிலங்களுக்கு சிறப்பு விதிகள் உள்ளன. இருந்தாலும், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு விதிகளுடன் இருந்த, 370வது சட்டப்பிரிவு, 2019, ஆகஸ்ட்டில், ஜனாதிபதியால் ரத்து செய்யப்பட்டது' என கூறப்பட்டுள்ளது.மேலும், காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கம் பற்றியும் விளக்கப்பட்டு உள்ளது. இந்திய - சீன உறவுகள் பற்றிய பாடத்தில், 'இந்திய - சீனா எல்லை தொடர்பான பேச்சில், இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பால் நம்பிக்கை சிதைந்தது' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.அதே போல், குஜராத் கலவரம், அவசர நிலை கால சர்ச்சைகள், காந்தி படுகொலை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், பாபர் மசூதி மூன்று குவிமாட கட்டடம் என்றும், அயோத்தி பிரச்னை சுமுகமாக தீர்க்கப்பட்டதாகவும் பாடத்தில் விளக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்