மருந்தியல் கல்லுாரிகளில் 22 பணியிடங்கள் காலி
சென்னை மற்றும் மதுரை மருத்துவ கல்லுாரிகளுடன் இணைக்கப்பட்ட மருந்தியல் கல்லுாரிகளில், பி.பார்ம்., எம்.பார்ம்., ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. அதேபோல் கோவை, தஞ்சாவூர் மருந்தியல் கல்லுாரிகளில், டி.பார்ம்., பாடப்பிரிவுகள் உள்ளன. தஞ்சாவூர், கோவையில் தலா ஒரு பேராசிரியர் மற்றும் ஒரு உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை, மதுரையில் தலா ஆறு இணை பேராசிரியர்கள், தஞ்சாவூரில் மூன்று, கோவையில் ஒன்று என, மொத்தம் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதுகுறித்து மருந்தியல் கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:இந்த நான்கு மருத்துவ கல்லுாரிகளில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என பணியிடங்களை பார்த்தால் மொத்தம் 35 என்ற அளவில் தான் இருக்கும். அவற்றில் பெரும்பாலான பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால் அரசு மருந்தியல் கல்லுாரிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்வர் பணியிடங்களும் காலியாக உள்ளன. சில கல்லுாரிகளில் பொறுப்பு முதல்வர் தான் கவனித்து வருகிறார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தும் பயனில்லை. எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.