உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 3 பேராசிரியர்கள் மாற்றம்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூர்: வட சென்னிமலை அரசு கலைக் கல்லூரியில், மூன்று பேராசிரியர்களை ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து மாணவ, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் அடுத்த வட சென்னிமலையில், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி ஆங்கிலத் துறையில், துறை தலைவராக சொர்ணமுத்துராஜ், பேராசிரியர்கள் அரியலூர் அண்ணாதுரை, அவரது மனைவி முத்துலட்சுமி, திருநெல்வேலி ராம்சங்கர் ஆகிய நான்கு பேர் பணிபுரிந்து வந்தனர். இரு மாதங்களுக்கு முன் ஆங்கில துறை ஆசிரியர்கள் அண்ணாதுரை, ராம்சங்கர் ஆகிய இருவருக்கும் இடையே, பிரச்னை ஏற்பட்டது. இவர்கள், கல்லூரி வளாகத்தில், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, கல்லூரி முதல்வர் மணிமொழி, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ்ச்செல்விக்கு, பரிந்துரை செய்தார். அதையடுத்து, கல்லூரி கல்வி இயக்குனர், ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் அண்ணாதுரை, அவரது மனைவி முத்துலட்சுமி, ராம்சங்கர் ஆகிய மூன்று பேரையும், அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். தகவலறிந்த கல்லூரி மாணவ, மாணவியர், நேற்று காலை 11 மணியளவில், ஓரிரு மாதங்களில், பல்கலைக் கழக தேர்வு நடக்கும் நிலையில், ஒரே நாளில், மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ததை கண்டிக்கிறோம் எனக்கூறி, கல்லூரியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட துறை தலைவர்கள், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மீண்டும் பணி நியமித்து, காலியாக உள்ள, 15 இடங்களில், ஆசிரியர்கள் நியமிக்ககோரி, மனு அளித்தனர். அதன்பின், மதியம், 2 மணியளவில், மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்