இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 30 ஆயிரம் இடங்கள் காலி?
தமிழகத்தில் தற்போது 443 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 354 கல்லூரிகள், கடந்த ஆண்டே பொறியியல் கவுன்சிலிங்கில் இடம் பெற்றவை. இந்த ஆண்டு 89 பொறியியல் கல்லூரிகள் புதிதாகத் துவக்கப்பட்டன. இதில் ஐந்து கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள்; மீதமுள்ள 84 கல்லூரிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இப்பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 8,586 இடங்கள் உள்ளன. பொறியியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜூலை 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஆக. 3ம் தேதி வரை 85 ஆயிரத்து 322 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 23 ஆயிரத்து 689 பேர் (27.76 சதவீதம்) கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் இருவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், 269 பேர், ‘இடம் வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்கி 25 நாட்கள் முடிவில், 61 ஆயிரத்து 362 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக. 3ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி, அரசு ஒதுக்கீட்டில் 47 ஆயிரத்து 224 இடங்கள் காலியாக உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் இரு இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இரு இடங்கள் தவிர, மீதமுள்ள 47 ஆயிரத்து 220 இடங்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ளன. முன்னணி கல்லூரிகள் மற்றும் இரண்டாம் தரக் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால், சில நாட்களாக, பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாதவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. ஜூலை 30ம் தேதி 35.81 சதவீதம், 31ம் தேதி 36.25 சதவீதம், ஆகஸ்ட் 1ம் தேதி 37.59 சதவீதம், 2ம் தேதி 39.91 சதவீதம், 3ம் தேதி 41.37 சதவீதம் பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்கின் கடைசி ஏழு நாட்களில், 32 ஆயிரத்து 891 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படவுள்ளனர். கடைசி ஏழு நாள் கவுன்சிலிங்கில், தினசரி கவுன்சிலிங்கிற்கு வராதவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏழு நாட்களில் 17 ஆயிரம் பேர் இடங்களை தேர்வு செய்தாலும், 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும். ஆக. 3ம் தேதி இரவு 7 மணி நிலவரப்படி, இ.சி.இ., படிப்பில் மொத்தமுள்ள 23 ஆயிரத்து 169 இடங்களில், 15 ஆயிரத்து 723 இடங்கள் (67.86 சதவீதம்) நிரம்பியுள்ளன. மெக்கானிக்கல் படிப்பில் மொத்தமுள்ள 15 ஆயிரத்து 94 இடங்களில், 11 ஆயிரத்து 133 இடங்கள் (73.76 சதவீதம்) நிரம்பியுள்ளன. இ.இ.இ., படிப்பில் மொத்தமுள்ள 15 ஆயிரத்து 458 இடங்களில், 8,401 இடங்கள் (54.35 சதவீதம்) நிரம்பியுள்ளன. சிவில் படிப்பில் மொத்தமுள்ள 8,077 இடங்களில், 5,311 இடங்கள் (65.75 சதவீதம்) நிரம்பியுள்ளன. கேட்பாரற்ற கம்ப்யூட்டர் சயின்ஸ் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை மிகவும் மந்த கதியில் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் மொத்தமுள்ள 21 ஆயிரத்து 830 இடங்களில், 8,975 இடங்கள் (41.11 சதவீதம்) மட்டுமே நிரம்பியுள்ளன. தகவல் தொழில்நுட்பப் படிப்பில் மொத்தமுள்ள 15 ஆயிரத்து 387 இடங்களில், 4,930 இடங்கள் (32.04 சதவீதம்) மட்டுமே நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டுகளில் இந்த இரு பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாததும், 84 புது தனியார் பொறியியல் கல்லூரிகளின் வருகையும் தான், இந்த ஆண்டு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதற்கு காரணம்.