மாணவர்களிடம் சிக்கிய ரூ.3.5 கோடி ஹவாலா பணம்
புனே: மஹாராஷ்டிராவின் புனே விமான நிலையத்திற்கு, கடந்த வாரம் மேற்காசிய நாடான துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த மூன்று மாணவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.அப்போது, அவர்கள் வைத்திருந்த புத்தகங்களுக்கு இடையே 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் இருந்ததை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். இதன் இந்திய மதிப்பு, 3.5 கோடி ரூபாய்.மாணவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புனேவைச் சேர்ந்த டிராவல் ஏஜன்ட் குஷ்பு அகர்வால் ஏற்பாட்டின்படி மூன்று மாணவர்களும் துபாய்க்கு கடந்த வாரம் சுற்றுலா சென்றது தெரியவந்தது.இவர்கள் மூவரும் நாடு திரும்பும்முன், முக்கிய அலுவலக கோப்புகள் அடங்கிய பைகளை துபாயில் இருந்து எடுத்துவரும்படி குஷ்பு அகர்வால் கேட்டுக்கொண்டுள்ளார்.இதையடுத்து, இரண்டு டிராலி பைகளுடன் புனே விமான நிலையத்திற்கு வந்தபோது, சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர். குஷ்பு அகர்வாலிடம் விசாரணை நடக்கிறது.