டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 1.06 லட்சம் பேர் பங்கேற்பு
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஜூன், 9ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 1.06 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்காக, சேலம் மாவட்டத்தில், 270 தேர்வு மையங்களில், 361 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்து 6,082 பேர் தேர்வெழுத உள்ளனர். ஜூன் 9 காலை, 9:30 முதல், மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ள தேர்வினை கண்காணிக்க, 89 நடமாடும் கண்காணிப்பு குழு, 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வர்கள் காலை 9:00 மணிக்கு முன் வருகை தர வேண்டும். அதற்கு பின் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா பதிவு, தடையில்லா மின்சாரம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.