உள்ளூர் செய்திகள்

வண்டலுார் பூங்காவில் 7டி தியேட்டர்

தாம்பரம்: வண்டலுார் உயிரியல் பூங்காவில், விலங்குகள் தொடர்பான திரைப்படங்களை பார்வையாளர்கள் கண்டு ரசிக்க, 4 கோடி ரூபாய் செலவில், 7டி தொழில்நுட்ப தியேட்டர் அமைக்கப்பட உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய உயிரியல் பூங்காவான, வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், பாலுாட்டிகள், ஊர்வன, பறவைகள், ஊன் உண்ணிகள் என, எட்டு வகையான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 2,500 முதல்- 3,000 பேர் வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற பொழுதுபோக்கு இடம் என்பதால், குடும்பத்தினருடன் வந்து, விலங்குகளை கண்டு ரசிக்க, பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், பார்வையாளர்களை குஷிப்படுத்தவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும், நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.அரிய விலங்குகள், விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், மற்ற பூங்காக்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், ஒரு குடும்பத்தினர் பூங்காவிற்கு வந்தால், விலங்குகளை நேரடியாக கண்டு ரசிப்பதோடு, விலங்குகள் தொடர்பான திரைப்படங்களை நவீன தொழில்நுட்பத்தில் படமாக பார்த்து ரசித்தால், குழந்தைகள் இன்னும் மகிழ்ச்சி அடைவர்.இதை அடிப்படையாகக் கொண்டு, பூங்காவில் 4 கோடி ரூபாய் செலவில் 7டி தொழில்நுட்ப தியேட்டர் ஒன்று கட்டப்பட உள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பூங்கா நுழைவாயிலில், நீரூற்று அருகே உள்ள பொருட்கள் வைப்பு அறையை, தியேட்டராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.பணிகள் முடிந்து தியேட்டர் திறக்கப்பட்டால், விலங்குகள் தொடர்பான திரைப்படங்களை 7டி தொழில் நுட்பத்தில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்