கொஞ்சம் படிங்க...
சக்கை போடு போடும் ஐ.ஐ.எம்.,மின் ஒரு ஆண்டு எம்.பி.ஏ., படிப்பு: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார மந்த நிலை உலகெங்கும் நிலவிய போது நமது ஐ.ஐ.எம்., நடத்தி வந்த ஒரு ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகள் பெரிதும் கவனிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய பொருளாதார மீட்சியில் மீண்டும் ஐ.ஐ.எம்.,களின் கவனத்தில் இந்த ஒரு ஆண்டு படிப்புகள் இடம் பெறுகின்றன. கார்ப்பரேட்களின் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஆண்டு படிப்புகள் மீண்டும் கடும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மின் பி.ஜி.பி.இ.எக்ஸ்., என அழைக்கப்படும் ஒரு ஆண்டு படிப்புக்கான விண்ணப்பங்கள் 30 முதல் 40 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. ஆனாலும் அடிப்படை வசதிகளின் தேவை கருதி 50 சீட்களுக்கு மேல் இதை அதிகரிக்க இயலாது என்று கோல்கட்டா ஐ.ஐ.எம்., தெரிவித்துள்ளது. ஹாஸ்டல் போன்ற தங்கும் வசதிகள் இதற்கு அவசியம் தேவை. எனினும் ஐ.ஐ.எம்.,மால் அதை விரிவுபடுத்த இயலவில்லை. லக்னோ ஐ.ஐ.எம்.,மாலும் இந்த ஒரு ஆண்டுப் படிப்பானது நடத்தப்படுகிறது. 2011ம் ஆண்டில் இந்தப் படிப்பை முடித்தவர்களை பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ், பிலிப்ஸ், டட்ச் பாங்க், கூகுள், பேஸ்புக், இன்போசிஸ், அக்செஞ்சர், மைன்ட்ரீ, அமேசான், போலாரிஸ், எச்.சி.எல்., ஹீரோஹோண்டா, ரிலையன்ஸ், ஆர்.பி.ஜி., குழுமம் ஆகியவை பணிக்கு எடுத்துக் கொண்டன. ஐ.டி., டெலிகாம் நிறுவனங்கள் இந்தப் படிப்பை முடித்தவர்களை அதிகம் விரும்புகின்றன. அனுபவம், தொடர்ந்து சிறப்பாகப் படித்திருப்பது, ஜிமேட் ஸ்கோர் மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக ஐ.ஐ.எம்.,கள் இந்தப் படிப்பில் ஏற்கனவே வேலையில் இருப்பவர்களை எடுத்துக் கொள்கின்றன. 14 முதல் 21 லட்ச ரூபாய் கட்டணம் இதற்கு பெறப்படுகிறது.