வரும் 16ல் வௌியாகிறது மருத்துவ படிப்பு தரவரிசை
தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில், 2.30 கோடி ரூபாய் மதிப்பில், சிடி ஸ்கேன் இயந்திர செயல்பாட்டை துவக்கி வைத்தும், மாரண்டஹள்ளி, தீர்த்தமலை, கடத்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.அப்போது அவர் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு மடங்காக இருந்த புறநோயாளிகள் எண்ணிக்கை, இரண்டு, மூன்று மடங்காக தற்போது உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ சேவை மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கு, 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 32,649 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். பெற்றோர் கோரிக்கையை ஏற்று, நாளை மறுதினம் வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16ல் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.