கோவையில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்
கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, 3 நாட்களில் அறிக்கை சமர்பிக்க தமிழக டி.ஜி.பி.,க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன், சமூக வலைதளம் வாயிலாக பழக்கமான இரண்டு கல்லுாரி மாணவர்கள், சிறுமியை கோவைப்புதுாரில் உள்ள தங்கள் அறைக்கு அழைத்து சென்றதும், அங்கு, இரண்டு மாணவர்கள், அவர்களுடன் அறையில் தங்கியிருந்த மேலும் ஐந்து மாணவர்கள் என, ஏழு பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.சிறுமியிடம் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில், ஏழு மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் ஏழு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், நேற்று (பிப்.,21) இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொடூரமான குற்றத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இந்த சம்பவம் குறித்து 3 நாட்களுக்கு தேசிய மகளிர் ஆணையத்திடம் தமிழக டி.ஜி.பி., அறிக்கை சமர்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.