குரூப் 2 தேர்வில் மனித நேய அறக்கட்டளை மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி
சார்பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில், சைதை துரைசாமி மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்றவர்களில், 249 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வருவாய்த் துறை, தொழிலாளர் நலத்துறை, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில், குரூப்-2 நிலையில் காலியாக இருந்த 1,628 அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல், மார்ச் 28 வரை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கணிசமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயிற்சி பெற்ற 400 பேரில், 249 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில், கரூரைச் சேர்ந்த கண்ணன், ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர், நகராட்சி கமிஷனர் பதவிகளுக்கான தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். மேலும், சார்பதிவாளர்களாக ஐந்து பேர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கு நான்கு பேர், தலைமைச் செயலக உதவிப்பிரிவு அலுவலர் பதவிக்கு 50 பேர், வருவாய்த் துறை உதவியாளர் பணிக்கு 172 பேர் என, மொத்தம் 249 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட வாரியாக தேர்வு பெற்றவர்களின் பதிவெண்கள் விவரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோரின் முடிவுகள், சான்றிதழ் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.