குரூப் 2 மறு தேர்வு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மைலியை சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு:தமிழில் பி.லிட் படித்துள்ளேன். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 5413 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., 2022 பிப்.,23 ல் அறிவித்தது. இது ஆரம்பநிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் தேர்வு என படிப்படியாக நடைபெறும். ஆரம்பநிலை தேர்வு 2022 மே 21 ல் நடந்தது. அதில் வெற்றி பெற்றேன். முதன்மை தேர்வு 2023 பிப்.,25ல் நடந்தது. மதுரையிலுள்ள ஒரு பள்ளியில் அமைந்த மையத்தில் தேர்வு எழுதச் சென்றேன்.காலையில் நடந்த முதல்தாள் தேர்வில் ஒரு தேர்வறைக்குரிய வினாத்தாள் (விடைகள் எழுதுவதற்குரிய இடவசதியுடன் கூடிய) புத்தகம் வேறு தேர்வறைக்கு மாற்றி வினியோகிக்கப்பட்டது.இக்குளறுபடியால் கண்காணிப்பாளர் வினாத்தாள் புத்தகத்தை எங்களிடம் திரும்பப் பெற்றார். இதனால் சில மணி நேரம் தேர்வு பாதித்தது. பின் தேர்வர்களுக்குரிய வினாத்தாள் புத்தகம் வினியோகிக்கப்பட்டது.இடைப்பட்ட நேரத்தில் பலர் அறையைவிட்டு வெளியேறி அலைபேசி இணையதளம், புத்தகத்தை பார்த்து விடைகளை எழுதினர். குளறுபடியால் தேர்வு காலை 9:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிக்கு முடிவதற்கு பதிலாக காலை 10:45 க்கு துவங்கி மதியம் 1:45 மணிக்கு முடிவுற்றது. அன்று மதியம் நான் எழுதிய அறையில் 2:30க்கு துவங்கிய இரண்டாம் தாள் தேர்வு 5:30 மணிக்கு முடிந்தது. வினாத்தாளை சரிபார்க்க 15 நிமிடம் அவகாசம் அளிக்கவில்லை. பல தேர்வு அறைகளில் மதியம் 2:15 க்கு துவங்கி மாலை 6:15 மணிவரை தேர்வு நடந்தது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கவில்லை.காலையில் நடந்த தேர்வில் தேர்ச்சியடைந்தால் போதும். அம்மதிப்பெண் தரவரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. இது ஏற்புடையதல்ல.இரண்டாம்தாள் தேர்வின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய தடை விதிக்க வேண்டும். அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மறு தேர்வு நடந்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மேலும் சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.நீதிபதி ஆர்.விஜயகுமார்: செவிவழிச் செய்திகள் அல்லது டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் அடிப்படையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் கற்பனையானது. குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை.பதிவு எண்களைக் கொண்ட விடைத்தாள் புத்தகங்களை வினியோகிக்கும் போது எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக, கவனமாக இருக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவு பிறப்பிப்பதைத் தவிர, ஆட்சேர்ப்பு நடைமுறையில் தலையிட இந்நீதிமன்றம் எவ்வித காரணத்தையும் காணவில்லை. தகுதி அடிப்படையில் இம்மனுக்கள் ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.