பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவருக்கு துணை தேர்வு தேதி அறிவிப்பு
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை எழுத விரும்புவோருக்கு, ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வை எழுத, தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று, இம்மாதம், 16ம் தேதி முதல் ஜூன் 1 வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறினால், ஜூன் 3, 4ம் தேதிகளில், சிறப்பு அனுமதிக்கான தத்கல் திட்டத்தில், கூடுதல் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நடப்பு 2023 - 24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கு, இந்த கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணை பயன்படுத்தியே ஹால் டிக்கெட் பெற முடியும்.பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும், 14ம் தேதி, தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு, ஜூலை 2 முதல் 9 வரை நடக்கும். துணைத் தேர்வுக்கான விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.