பிளஸ் 2 உடனடி மறுதேர்வு எழுதிய மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூலைமாதம், உடனடி மறுதேர்வு நடந்தது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, தேர்வு முடிவுகள், ஒரு வாரத்திற்கு முன் வெளியானது. இதில், 2000 மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அவர்களுக்கு இனி, "டேட்டா சென்டர்" மூலம், மீண்டும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்து வழங்குவர். இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான உடன், ஆக., 7, 8 ம்தேதி, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க, தேர்வுத்துறை வாய்ப்பு அளித்தது. இதையடுத்து, மாணவர்கள் பலரும் நேற்று முதல், ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், தேர்வு முடிவு வெளியாகாத, 2000 க்கும் மேற்பட்ட மாணவர்களால், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியவில்லை. "தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின், மறுமதிப்பீடுக்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் தேர்வுத் துறையில், சரியான திட்டமிடல் இல்லாதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்" என மாணவர்கள் தெரிவித்தனர்.