செப்., 2ல் ஆதித்யா எல் 1: ஏவ இஸ்ரோ திட்டம்
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதைத் தொடர்ந்து, லேண்டரில் இருந்து பிரிந்த பிரஜ்ஞான் ரோவர் சாதனம், லேண்டரின் பக்கவாட்டு சாய்வு பாதை வழியாக நிலவில் மெல்ல இறங்கியது. இந்த ரோவர், நிலவில் 8 மீட்டர் துாரம் வரை பயணித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இஸ்ரோவின் இந்த சாதனையை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.உள்நாட்டில்இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, சூரியனை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தயாராகி வருகின்றன. இதற்காக, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, அடுத்த மாதம் 2ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.இது குறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை ஏற்கனவே சூரியனை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த வரிசையில் நாமும் இணையவுள்ளோம். சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளோம். பெங்களூரில் உள்ள வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், புனேயில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை, இந்த விண்கல வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன.பெங்களூரில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விண்கலம், இரண்டு வாரங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. செப்., 2ல் இந்த விண்கலத்தை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் ஏழு செயற்கைக்கோள்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விண்கலம் நான்கு மாதம் பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, எல் 1 என்ற மையப்புள்ளியில் நிலை நிறுத்தப்படும்.எல் 1 என்பது, லெக்ரேஞ்சியன் பாயின்ட் என அழைக்கப்படுகிறது. இது, சூரியன் - பூமி சுற்றுப்பாதையில் உள்ள ஒளிவட்டப் பகுதி. ஆதித்யா விண்கலம், எல் 1 என்ற பகுதியிலிருந்து, சூரியனை ஆய்வு செய்யும். சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப அலைகளின் மாறுபாடு, சூரிய புயல்களின் தாக்கங்கள், சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வந்தால், அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை குறித்து இந்த விண்கலம் ஆய்வு மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.ஐரோப்பிய நாடான கிரீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த பயணத்தை முடித்து விட்டு நேரடியாக கர்நாடகா மாநிலம் பெங்களுருக்கு நேற்று விமானத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து இஸ்ரோ மையத்துக்கு சென்ற அவர், சந்திரயான் - 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது, சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், திட்டத்தின் மாதிரியை பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். லேண்டர் விக்ரம் படம்பிடித்த புகைப்படங்களை பரிசாக வழங்கிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான் திட்டம் குறித்து பிரதமருக்கு விளக்கினார். இதன்பின், இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பிரதமர் பேசியதாவது:மிகப் பெரிய சாதனையை படைத்த விஞ்ஞானிகளுக்கு மத்தியில் இருப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல பிறவிகள் காத்திருந்து கிடைத்த மகிழ்ச்சி போல உள்ளது. சில நேரங்களில் சிலர், அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது உண்டு. அதுபோன்ற உணர்ச்சி தற்போது எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதிகாலையிலேயே உங்களை அழைத்து தொந்தரவு செய்து விட்டேன். எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக உங்களைப் பார்க்க வேண்டும், உங்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என நினைத்தேன். இது சாதாரண வெற்றி அல்ல. அளவிட முடியாத விண்வெளியில், இந்திய விஞ்ஞானிகளுக்கான சங்கநாதமாக சந்திரயான் - 3 வெற்றி திகழ்கிறது. இந்தியா, நிலவில் கால் தடம் பதித்துள்ளது. நம் நாட்டின் கவுவரத்தை சர்வதேச அரங்கில் நிலைநாட்டியுள்ளோம். இதுவரை யாரும் செய்யாத வகையில், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து சாதனை படைத்துள்ளோம். இது தான் இன்றயை இந்தியா. உணர்ச்சி மிகுந்த, விழிப்பு மிகுந்த இந்தியா. புதிய வழியில் சிந்திக்கும் இந்தியா. இந்த வெற்றி, ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சொந்தமானது. இத்திட்டத்தின் ஆய்வுகள், பிற நாடுகளின் நிலவுப் பயணங்களுக்கான புதிய கதவுகளை திறந்து விட்டுள்ளது. நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்கிய இடம் இனி, சிவசக்தி பாயின்ட் என அழைக்கப்படும். இதில் சிவம் என்பது, மனித குலத்துக்கான தீர்மானங்களையும், உறுதியையும் குறிக்கிறது. இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பலத்தை, சக்தி என்ற வார்த்தை நமக்கு கொடுக்கிறது. நிலவில் உள்ள இந்த சிவசக்தி புள்ளி, இமயமலைக்கும், கன்னியாகுமரிக்கும் உள்ள தொடர்பை குறிக்கிறது. இத்திட்டத்தின் வெற்றியில், நம் பெண் விஞ்ஞானிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. நிலவில் உள்ள இந்த சிவசக்தி புள்ளி, நம் நாட்டின் அறிவியல் மற்றும் தத்துவார்த்த சிந்தனைக்கு சாட்சியாக விளங்கும். இதேபோல், சந்திரயான் - 2 லேண்டர் நிலவில் விழுந்த இடம், திரங்கா எனப்படும் மூவர்ணக்கொடி என அழைக்கப்படும். இது, இந்தியா எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் உத்வேகத்தை அளிக்கும். தோல்வி முடிவல்ல என்பதை நமக்கு நினைவூட்டும்.நிலவில் சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்கிய நாளான, ஆகஸ்ட் 23ம் தேதி, இனி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். அறிவிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பெருமையை உணர்த்தும் வகையில் இந்த தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும். இவ்வாறு பிரதமர் பேசினார்.பெண் ரோபோபுதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம், கொரோனா வைரஸ் காரணமாக தாமதமாகியுள்ளது. விண்ணுக்கு மனிதர்களை அனுப்புவது போல், அவர்களை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதும் முக்கியமாகும்.இதனால், ஆளில்லாமல் ககன்யான் விண்கலம், அக்., முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அனுப்பி வைக்கப்படும். இதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக, வியோமித்ரா என்று பெயரிடப்பட்டுள்ள பெண் ரோபோ விண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.இவற்றின் வெற்றிகளைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டத்தில், நம் வீரர்கள் விண்வெளிக்கு பயணிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.4 நாடுகளின் விண்வெளி வீரர்கள்நாசா எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை, விண்வெளியில் அமைத்துள்ளன. இதில் ஆறு மாதங்கள் தங்கி, விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்வர். இதன்படி, அடுத்தகட்டமாக நான்கு வீரர்கள் நேற்று புறப்பட்டு சென்றனர். முதல் முறையாக, நான்கு பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.