பொருளாதாரத்திற்கு ரூ.20லட்சம் கோடி: ஐ.ஐ.டி., மாணவர்களின் பங்களிப்பு!
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஐ.ஐ.டி.களில் படித்த மாணவர்கள் நமது பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த அளவு பங்களிப்பைச் செய்துள்ளார்கள் என்பது குறித்து அனைத்து ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஜினோவ் மேனேஜ்மெண்ட் கன்ஸல்டிங் என்ற தனியார் நிறுவனம் 4,573 ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்களிடம் இதுகுறித்து சர்வே நடத்தியது. ஐ.ஐ.டி.கள் தொடங்கப்பட்டதிலிருந்து 2 லட்சம் மாணவர்கள் அங்கிருந்து படித்து வெளியேறியுள்ளனர். இதில் 40 சதவீதம் பேர் இளநிலைப் பட்டம் படித்து வெளியேறியவர்கள். மற்றவர்கள் முதுநிலைப் பட்டம் படித்தவர்கள். நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் ரூ.20 லட்சம் கோடி அளவுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 2 கோடி வேலைவாய்ப்பை உருவாக்கியதிலும் அவர்களது பங்கு உள்ளது. அதாவது ஒரு ஐ.ஐ.டி., மாணவர் மூலம் 100 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. கடந்த 58 ஆண்டுகளில் ஐ.ஐ.டி.,களுக்காக ரூ.20 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடி வரை அரசு செலவிட்டிருக்கும். இதற்கான முதலீட்டையும் த பொருளாதார முன்னேற்றத்திற்கான பங்களிப்பையும் கருத்தில் கொண்டால், அதாவது ஒரு ரூபாய் செலவிட்டதற்கு ரூ.15 அளவுக்கு திரும்பக் கிடைத்துள்ளது என்று ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவரும் செயின்ட் கோபைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான பி. சந்தானம் தெரிவித்தார். 2001ம் ஆண்டுக்கு முன் பட்டம் பெற்றவர்களில் 10க்கு நான்கு பேர், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆய்வகங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்களில் பத்துக்கு ஏழு பேர் இந்தியாவிலேயே உள்ளனர். இந்தியாவில் உள்ள முதல் 500 நிறுவனங்களில் 54 சதவீத நிறுவனங்களில் நிர்வாக போர்டு உறுப்பினர்களில் ஒருவராவது ஐ.ஐ.டி.யில் படித்தவர் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் டிசம்பர் 19ம் தேதியிலிருந்து 21ம் தேதி வரை நடைபெறும் ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர்கள் மாநாட்டில், இந்த ஆய்வு தொடர்பான விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.