பள்ளிகளில் 20 சதவீத மாணவர்கள் ஆப்சென்ட்
பொள்ளாச்சி: விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டுவதால், பல அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை சதவீதம் குறைந்தே காணப்பட்டது.பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து மக்கள் கட்சி, ஹிந்து மக்கள் கட்சி ஹனுமன், உலக நல வேள்விக்குழு, பொதுமக்கள் என, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.சிறப்பு வழிபாட்டிற்கு பின், அம்பராம்பாளையம், ஆனைமலையில் ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன. கடந்த இரு தினங்களாக, ஒவ்வொரு பகுதியில் இருந்தும், விநாயகர் சிலைகளை வாகனங்களில் எடுத்துச் சென்று, ஆற்றில் விசர்ஜனம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.குறிப்பாக, சிலைகளை கரைக்க பள்ளி மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள சில அரசு பள்ளிகளில், மாணவர்களின் வருகை, வழக்கத்துக்கு மாறாக, 10 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. இதுபற்றி, சக மாணவர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர்.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில், வழிபாடு உள்ளிட்டவைகளுக்கு அந்தந்த பகுதி மாணவர்களே ஆர்வம் காட்டுகின்றனர். இன்று, பள்ளி செயல்பட்டாலும், மாணவர்கள் சிலர் ஊர்வலத்தில் பங்கேற்கவும், சிலைகள் கரைக்கவும் சென்றதாக, சக மாணவர்கள் வாயிலாக தெரியவந்தது.கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களில் உள்ள அரசு பள்ளிகளில், நேற்று மாணவர்கள் வருகை, 20 சதவீதம் அளவில் குறைந்தே காணப்பட்டது. இதனால், குறு மைய அளவில் வென்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது, என்றனர்.