அமெரிக்க எச்1பி விசா நேர்காணல் அக்டோபருக்கு மாற்றம்: இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
நியூயார்க்: அமெரிக்காவில் பணிபுரிவதற்கு வழங்கப்படும், 'எச்1பி' விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளோருக்கான நேர்காணல்களை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு அந்நாட்டு அரச ஒத்திப் போட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து குடியேற்ற விதிகளையும், விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். குறிப்பாக, வெளிநாட்டு பணியாளர்களால், அமெரிக்கர்கள் வேலை இழப்பதாகக் கூறி, எச்1பி விசாவில் பல்வேறு கெடுபிடிகளை விதித்தார்.அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தினார். மேலும் , கடந்த 15ம் தேதி முதல் எச்1பி மற்றும் எச்-4 விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதளங்களை கட்டாய ஆய்வுக்கு உட்படுத்தும் விதியையும் அமல்படுத்தினார்.இதன் காரணமாக, அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துணைத் துாதரகங்களில் விசா நேர்முகத் தேர்வுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்தியாவில் சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் டிசம்பர் 15 அல்லது அதற்கு பிறகு திட்டமிடப்பட பல நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பத்தாரர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நேர்காணல்கள் 2026-ம் ஆண்டின் பிற்பகுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.சில விண்ணப்பதாரர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கப்பட்ட நேர்காணல் தேதி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.பல இந்திய ஊழியர்கள் 'எச்1பி' விசா அனுமதிக்காக குடும்பத்தினரை அமெரிக்காவில் விட்டுவிட்டு விடுமுறை எடுத்து நாடு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது அவர்களால் அமெரிக்காவுக்கு செல்ல முடியவில்லை.அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணியாற்றுபவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்களே. இதனால், இந்த நெருக்கடி இந்திய ஊழியர்களையே அதிகம் பாதித்துள்ளது.