உள்ளூர் செய்திகள்

கோவையில் 48 கைதிகள் 8ம் வகுப்பு தேர்வு எழுதினர்

கோவை மத்திய சிறையில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு டிச. 8ம் தேதி துவங்கியது.  தூக்கு தண்டனை கைதி, கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு கைதிகள் உட்பட 48 பேர் ‘தமிழ்’ பாடத் தேர்வு எழுதினர். கோவை மத்திய சிறையில் 700 ஆயுள் கைதிகள், குண்டு வெடிப்பு வழக்கு கைதிகள் உட்பட 2,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் தொலைநிலைக் கல்வி முறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கின்றனர். இவர்களை பார்த்து, படிப்பு மீது ஆர்வம் கொண்ட 48 கைதிகள், தாங்களும் படிக்க விரும்புவதாக மத்திய சிறை நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர்; இந்த கைதிகள் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள். எனவே, இவர்களை எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார்படுத்திய சிறை அதிகாரிகள், சிறையில் உள்ள சக பட்டதாரி கைதிகளை கொண்டே பல மாதமாக பாடம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, கோவை மத்திய சிறையில் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு டிச. 8ம் தேதி துவங்கியது; 48 கைதிகள் ‘தமிழ்’ பாடத்துக்குரிய முதல் நாள் தேர்வில் பங்கேற்றனர்; மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோவிந்தராஜன் கூறியதாவது:கொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்டு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற கைதி மற்றும் கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள், பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற 31 கைதிகள் உட்பட 48 பேர் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முதல் தாள் தேர்வு எழுதினர். அடுத்து வரும் பாடங்களுக்குரிய தேர்வுகள் நடக்கவுள்ளன. சிறைக்கைதிகளிடையே மனமாற்றத்தை ஏற்படுத்தவும், சுயமுன்னேற்ற எண்ணத்தை மேம்படுத்தவும் கல்வி வாய்ப்புகளை அதிகரித்து, படிப்பின் மீது நாட்டம் கொள்ள செய்துள்ளோம். இச்சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற வக்கீல், டாக்டர், ஆசிரியர் என படித்தவர் பலரும் உள்ளனர். இவர்களை கொண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடனும் கைதிகளுக்கு பாடம் நடத்தி, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளச் செய்துள்ளோம். சிறைத் துறை டி.ஜி.பி., நடராஜ் தீவிர முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து, கோவை சிறையில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குரிய மையம் அமைக்க கல்வித்துறை அனுமதித்தது. இச்சிறையில், இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, பாரதியார் பல்கலை ஆகியவற்றின் தொலைநிலைக் கல்வி மையங்களும் செயல்படுகின்றன. கைதிகள் பலரும் ஆர்வமுடன் பயின்று பட்டம் பெற்றுள்ளனர். தவிர, கைதிகளின் அணுகுமுறை மற்றும் செயலை முறைப்படுத்த நூலகமும் நடத்துகிறோம். இதில், 5,000 புத்தகங்கள் உள்ளன. ஆன்மிகம், பொதுஅறிவு, சுய முன்னேற்றம் உள்ளிட்ட புத்தகங்களை கைதிகள், தமது அறைகளுக்கு எடுத்துச் சென்று படிக்கின்றனர். சூழ்நிலை காரணமாக குற்றவாளியாகி சிறைக்கு வந்தவர்கள், விடுதலையாகிச் செல்லும் போது, அறிவு கூர்மை உள்ளவர்களாகவும், சமூகத்தை பற்றிய தெளிவான பார்வை உள்ளவர்களாகவும் இருப்பர். இவ்வாறு, கோவிந்தராஜன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்