ஐ.எம்.ஏ.,வில் 498 பேர் தேர்ச்சி
டெகராடூனில் செயல்படும் இந்தியன் மிலிடரி அகாடமியானது அக்டோபர் 1, 1932 அன்று பிரிகேடியர் எல்.பி.காலின்ஸ் என்பவரை கமாண்டண்ட்டாகக் கொண்டு துவக்கப்பட்டது. 76 ஆண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் இந்த நிறுவனம் ராணுவம் தொடர்புடைய படிப்புகளுக்குப் பெயர் பெற்றது. இங்கு படித்த சாம் மானெக்ஷா, ஸ்மித்டன், முகமது மூசா போன்றவர்கள் பின்னாளில் இந்திய, பர்மா மற்றும் பாகிஸ்தான் ராணுவப் பணிகளின் பெருமை மிகு பொறுப்புகளை வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இங்கு பயின்ற மாணவர்களின் தேர்ச்சியைக் குறிக்கும் பரேட் நடைபெற்றது. இதில் 24 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 மாணவர்கள் தேர்ச்சி பெற்றது அறிவிக்கப்பட்டது. இதை இந்திய ராணுவத் தலைவர் தீபக் கபூர் பார்வையிட்டார். ஐ.எம்.ஏ.,வில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாகப் பணியில் அமர்கின்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 468 பேர் இந்திய ராணுவத்திலும் 6 பேர் அசாம் ரைபிள் பிரிவிலும் இணைய உள்ளனர். ஒன்றரை ஆண்டு கால பயிற்சிக்குப் பின் ராணுவத்தில் இணையும் இந்த மாணவர்களுக்கு தேசப் பாதுகாப்பு, தேசிய மரியாதை, தேச நலன் குறித்த தீவிர பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. சிப்பாய்களின் நற்பண்புகளும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் காரணமாக இநத் நிகழ்ச்சிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 2005ல் இதே போன்ற ஒரு நாளில் ஒரு தீவிரவாதி பிடிக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது நினைவிருக்கலாம். தீவிரவாத சக்திகளை எதிர்க்கவும் நாட்டு நலனைப் பாதுகாக்கவும் ராணுவத்தில் இணையும் இந்த இளைய தலைமுறையைத் தந்தமைக்காக ஐ.எம்.ஏ., அனைவரின் பாராட்டுதலையும் தொடர்ந்து பெற்று வருகிறது.