ஐமா 50ம் ஆண்டு பொன்விழா 51 கலைஞர்களுக்கு கவுரவம்
சென்னை: அகாடமி ஆப் இந்தியன் மியூசிக் அண்டு ஆர்ட்ஸ் எனும் 'ஐமா' நிறுவனத்தின் 50ம் ஆண்டு பொன் விழா, 'சென்னையில் செம்பை' என்ற தலைப்பில், சென்னை, அண்ணாமலைபுரம் இமேஜ் அகாடமியில் நேற்று நடந்தது.விருது இந்நிகழ்ச்சியில், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, பஹ்ரைன் நாட்டின் 'யுனிகோ' நிறுவன முதன்மை அதிகாரி ஜெயசங்கர் விஸ்வநாதன் ஆகியோருக்கு, 'செம்பை சங்கீத் சம்ரக் ஷக்' விருது வழங்கப்பட்டது.மேலும், கைலாய இசை எனும் செம்பை இசை மற்றும் நடனத்தில் சிறந்து விளங்கும் 51 கலைஞர்களுக்கு, 'ஆச்சார்ய ரத்னா' விருது வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:இது ஒரு உணர்வுபூர்வமான தருணம். என் செம்பை தாத்தாவை கொண்டாடும் விழாவில், பேசுவதில் பெருமை. அவரை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், அவரைப் பற்றிய பல தகவல்களை கேட்டுள்ளேன்.ஒரு நாள், செம்பை தாத்தா காலையில் எழும்போது, அவருடைய குரலில் பெரிய பிரச்னை இருப்பதை உணர்ந்தார். எந்த ஒரு இசைக் கலைஞனுக்கும், இது நேரக்கூடாது.ஆனால், செம்பை தாத்தா உறுதியாக இருந்தார். எதற்கும் அஞ்சாமல், தன்னை முழுமையாக குருவாயூரப்பனின் திருவடிகளில் சரணடைந்தார். சில நாள் சிகிச்சைக்கு பின், அவரது குரல் முன்பைவிட, பலத்துடன் திரும்பியது. அன்று முதல் அவர் குருவாயூரப்பனின் தீவிரப் பக்தரானார்.மனிதநேயம் அந்த சம்பவத்திற்கு பின், தன் வாழ்க்கை மற்றும் இசை இரண்டையும் இறைவனிடம் அர்ப்பணித்து, தன் வருமானம் முழுவதையும் குருவாயூர் கோவிலுக்காக செலவழித்தார்.அவர் ஒரு, இசை குருவாக மட்டுமின்றி சிறந்த மனிதநேயத்துடன், தன் சீடர்களை எந்த பேதமும் இன்றி சமமாக நடத்தினார். அவருக்கு பின், தற்போது 94 வயதில் டி.வி.ஜி., ஐயா, இந்த குரு - சிஷ்ய பரம்பரையின் உயிருள்ள சான்றாக விளங்குகிறார்.பல ஆண்டுகளாக இந்த அரிய மரபை அவர் சுமந்து வருகிறார். இதற்கு சான்றாக, இன்று தொலைதுாரப் பகுதிகளில் இருந்து 51 குருமார்களை அடையாளம் கண்டு, குரு - சிஷ்ய பரம்பரை மரபை, இந்த 'ஐமா' அமைப்பின் வழியே, காத்து வருகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "ஒரு சமூகம், தன் கலாசார நிறுவனங்களை புறக்கணித்தால், அதன் நெறி, அடித்தளம் பலவீனமடையும். மனிதநேயம், ஒழுக்கம், கருணை, பொறுப்புணர்வை இசை வளர்க்கிறது. பாரம்பரியத்தை பிடித்துக் கொண்டு, தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில், ஆன்மாவை இழக்காமல் செல்லும் பயணம் அனைவரிடமும் வேண்டும்," என்றார்.