உள்ளூர் செய்திகள்

மாணவருக்கு ரூ.5.10 லட்சம் இழப்பீடு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியைச் சேர்ந்தவர், ஜூஜார் சிங்,23. இவர், உயர் கல்விக்காக அமெரிக்கா செல்ல 2021 ஜூலை 27ம் தேதி புதுடில்லியில் இருந்து சிகாகோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க தனியார் ஏஜென்ட் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.பயணம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், எப் 1 விசாவுடன் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, மாணவர் ஜூஜார் சிங், அதிக லக்கேஜ் கொண்டு வந்ததாகவும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லை எனவும் கூறி, விமானத்தில் பயணிக்க, விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாயத்தில், ஜூஜார் சிங் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னை மனிதாபிமானம் இன்றி நடத்தி, மன உளைச்சல் ஏற்படுத்தியதாகவும், விமான முன்பதிவு கட்டணம் 41,133 ரூபாய் மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக, 20 லட்சம் ரூபாய் மற்றும் வழக்கு செலவுக்கு, 10,000 ரூபாய் வழங்க உத்தரவிடக் கோரியிருந்தார்.கடந்த ஓராண்டாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. திருவள்ளூர் நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் லதா மகேஸ்வரி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். அதில், பாதிக்கப்பட்ட மாணவருக்கு, ஏர் இந்தியா விமான நிறுவனம் மன உளைச்சல் மற்றும் சிரமத்தை ஏற்படுத்தியதற்காக 5 லட்ச ரூபாயும், வழக்கின் செலவிற்காக 10,000 ரூபாயும் வழங்க வேண்டும். இதனை, ஆறு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்