துருக்கி 6,000 கி.மீ., துாரம் பாயும் ஏவுகணை அறிமுகம்
அங்காரா: ராணுவத் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் துருக்கி, தற்போது 6,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணையை அறிமுகப்படுத்தி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 'சஹா - 2026' என்ற பெயரில் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் ராணுவம் அமைச்சகம், 'யல்டிரிம்ஹான்' என்ற புதிய ஏவுகணை ஒன்றை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஏவுகணை ஒலியை விட 25 மடங்கு வேகத்திலும், 3,000 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. திரவ எரிபொருளில் இயங்கும் 4 ராக்கெட் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் தயாரிப்பில் கொடிகட்டிப் பறக்கும் துருக்கி, தற்போது 6,000 கி.மீ., துாரம் வரை பாயும் ஏவுகணையை உருவாக்கி, தன் ராணுவ உற்பத்தியின் வளர்ச்சியை உலகிற்கு காட்டியுள்ளது.