நாளை 63 மையங்களில் பிளஸ் 2 தேர்வு துவக்கம் கண்காணிக்க 135 பேர் படை
ராமநாதபுரம்: நாளை (மார்ச் 1) பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 63 தேர்வு மையங்களில் 14,198 பேர் எழுதுகின்றனர்.தேர்வை கண்காணிக்க 63 முதன்மை கண்காணிப்பாளர்கள், 135 பேர் கொண்ட நிலைத்த படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் 70 அரசுப்பள்ளிகள், 37 உதவி பெறும் பள்ளிகள், 52 தனியார் பள்ளிகள், ஒரு மாதிரிப் பள்ளி என 160 மேல்நிலைப்பள்ளிகளிலும், தனித்தேர்வுகள் 280 பேர் மாற்றுத்திறனாளிகள் 100 பேர் என 7500 மாணவிகள், 6698 மாணவர்கள் என 14,198 பேர் பிளஸ் 2ல் தேர்வு எழுத உள்ளனர்.வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி, கமுதி ஆகிய 4 இடங்களில் ஜன்னல் இல்லாத ஒருவழிப் பாதை மட்டும் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளன.தேர்வை கண்காணிக்க 63 முதன்மை கண்காணிப்பாளர்களின் கீழ் 135 பேர் கொண்ட நிலைத்த படை அமைக்கப்பட்டுள்ளது.இதுதவிர வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் காப்பாளர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுத்தேர்வு நடைபெறும் 63 மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் செய்யப்பட்டுள்ளது.வினாத்தாள் வைத்துள்ள இடங்களில் 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தேர்வு காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத நேரம் அனுமதிக்கப்படும் என கல்விதுறை அதிகாரிகள் கூறினர்.