10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
புதுடில்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, கடந்தாண்டு, ஜனவரியில், பார்லி.,யில் நிறைவேறியது. அதற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.இதைத் தவிர, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யக் கோரி, மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக, தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. கடந்தாண்டு, ஜூலை, 31ல், இந்த வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், தலைமை நீதிபதி, எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள், ஆர். சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, இந்த வழக்குகள் அனைத்தையும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக, தன் தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியல் சாசன திருத்தத்தை எதிர்ப்பதால், இந்த வழக்குகளை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதாக, தன் தீர்ப்பில் அமர்வு கூறியுள்ளது.