உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் 2024-25ம் கல்வியாண்டில் அமல்

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ., பாடதிட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரிக்கு என, தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழக அரசின் கல்வி வாரிய பாட திட்டங்களே புதுச்சேரியில் பின்பற்றப்பட்டு வந்தது. மத்திய அரசு போட்டிப் தேர்வுகளில் புதுச்சேரி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற பாட திட்டத்தை மாற்ற அரசு முடிவு செய்தது.இதற்காக புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1 வகுப்புகள் இந்தாண்டு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்ட நடைமுறைப்படுத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மட்டும் இந்தாண்டு தமிழக அரசு பாட திட்டத்தின் கீழ் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாமில் 126 அரசு பள்ளிகள் சி.பி.எஸ்.இ., வாரியத்துடன் இணைக்கப்பட்டது. வரும் 2024-25ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளும் சேர்த்து, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளும் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் கொண்டவரப்படுகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழக பாட திட்ட கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கும். புதுச்சேரியில் அனைத்து அரசு பள்ளிகளும் வரும் கல்வியாண்டு சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் துவங்க உள்ளதால், சி.பி.எஸ்.இ., வாரிய விதிமுறைகள்படி, ஏப்ரல் 1ம் தேதி பள்ளிகள் துவங்கி 2025 மார்ச் முடியும். இதில், ஏப்ரல் மாதம் ஆண்டு விடுமுறை அளிக்கப்படும். மொத்தம் 220 வேலை நாட்கள் உள்ளது.வரும் கல்வியாண்டிற் கான நாட்காட்டியை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று வெளியிட்டார். நிகழ்ச்சியில் கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர் சிவகாமி கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு 1:00 மணிக்கு மேல் இருக்கக் கூடாது. மற்ற மாநிலத்தை விட புதுச்சேரி அரசு பள்ளிகளின் வசதிகள் சிறப்பாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள் வழங்கியதாக வந்த புகார் குறித்து முதல்வர் விசாரணை நடத்தி வருகிறார். இலவச சைக்கிளுக்கு பதில் பணம் தரலாமா என, அரசு ஆலோசித்து முடிவு அறிவிக்கும்.கல்வித்துறை அலுவலகத்தில், அத்தியாவசிய பணியில் 10 ஆசிரியர்கள் உள்ளனர். நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. புதிய பணியிடம் நிரப்ப 3 மாதம் ஆகும். அந்த கால கட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த இடைக்கால ஏற்பாடாக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தை பின்பற்றி ஆசிரியைகளுக்கு புடவைக்கு பதில் சுடிதார் அணிவது குறித்து முதல்வருடன் பேசி முடிவு அறிவிக்கப்படும்.புதுச்சேரியில் நாராயணசாமி முதல்வராக இருந்தபோது, நகர பகுதியில் ஸ்மார்ட் மீட்டர்கள் மாற்றப்பட்டது. தற்போது மக்களை ஏமாற்ற காங்., போராட்டம் நடத்துகிறது. இது ஏமாற்று நாடகம். காங்., கொண்டு வந்த திட்டம். அதை இந்த அரசு பின்பற்றுகிறது. புதுச்சேரிக்கு மின்சாரம் வாங்கும் இடத்தில் விலை அதிகமாக இருப்பதால், மின் கட்டணம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.மின்சாரம் குறைந்த விலையில் கிடைக்கும் இடத்தில் புதுச்சேரிக்கான ஒதுக்கீடு மின்சாரம் வாங்கி கொள்ள மத்திய மின்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்