ரூ.15 லட்சத்தில் ஆய்வுக்கூடம் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
சென்னை: ஏ.சி., டெக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘கம்ப்யூட்டேஷனல் புளூயிட் டைனமிக்ஸ்’ ஆய்வுக்கூடத்தை அக்கல்லூரிக்கு வழங்கியுள்ளனர். இக்கல்லூரியில் 1983ம் ஆண்டு வேதி பொறியியல் பிரிவில் 35 மாணவர்களும், டெக்ஸ்டைல் தொழில்நுட்ப பிரிவில் 30 மாணவர்களும், லெதர் தொழில்நுட்ப பிரிவில் 20 மாணவர்களும் படித்தனர். அதில் வேதி பொறியியல் துறைத்தலைவர் வேலன், லெதர் தொழில்நுட்பத்துறை தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தொழில்துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். இந்த முன்னாள் மாணவர்கள் இணைந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ‘கம்ப்யூட்டேஷனல் புளூயிட் டைனமிக்ஸ்’ ஆய்வுக்கூடத்தை கல்லூரிக்கு வழங்கியுள்ளனர். ஆய்வுக் கூடத்தை சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர், மத்திய அறிவியல் துறை செயலர் ராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். முன்னாள் மாணவர்கள் இந்த ஆய்வுக்கூடத்தை தங்களது முன்னாள் பேராசிரியர் தெகலீசனுக்கு அர்ப்பணித்துள்ளனர்.