17வது பழங்குடி இளைஞர் பரிமாற்ற விழா
சென்னை: கவர்னர் ஆர். என். ரவி நவ., 24 அன்று சென்னையில் நடைபெறும் 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 220 பழங்குடியினர் இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஒரு வார காலம் நடைபெறும் இந்த பரிமாற்ற நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் தமிழ்நாட்டின் கல்வி, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை நேரடியாக அனுபவிக்க உள்ளனர். மேலும் ஐஐடி சென்னை, மெரினா கடற்கரை, பிர்லா கண்டெய்னர் நிறுவனம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி மை பாரத் - தமிழ்நாடு மையம், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியுடன் இணைந்து நவம்பர் 23 முதல் 29 வரை நடத்தப்படுகிறது.இந்த பரிமாற்ற திட்டத்தின் நோக்கம், பழங்குடியினர் இளைஞர்களுக்கு கல்வி, தொழில்துறை முன்னேற்றம், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும், அவர்களின் சுய மரியாதை, சமூக ஒற்றுமை, தேசிய உணர்வு ஆகியவற்றை உயர்த்துவது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.