2வது நாளாக தொடர்ந்தது மாணவர்களின் போராட்டம்
பொன்னேரி: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், மீன்வள படிப்பு துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாம் நாளாக நேற்றும், தமிழ்நாடு மீன்வள கல்லுாரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், இந்த கல்வியாண்டில் மீன்வள பட்டப்படிப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கு, தமிழ்நாடு மீன்வள கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொன்னேரி, தமிழ்நாடு மீன்வள தொழில்நுட்ப கல்லுாரியைச் சேர்ந்த, 60 மாணவர்கள், நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளாக நேற்றும், மாணவர்களின் இப்போராட்டம் தொடர்ந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துவங்க உள்ள, மீன்வள படிப்பிற்கு தடை விதிக்கும் வரை, போராட்டம் தொடரும் என, மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.கல்லுாரி நிர்வாகத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.