2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு: 808 மாணவர்களுக்கு இடம்
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் உள்ள, 1,823 மருத்துவ இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம், 18ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடந்தது. முதல் கட்ட கலந்தாய்வில், ஏழு பேர் மருத்துவ படிப்பை எடுக்கவில்லை. இந்நிலையில், அரசு கல்லூரியில் உள்ள, 356 இடங்கள் மற்றும் ஏற்கனவே மருத்துவ படிப்பை எடுக்காத, ஏழு இடங்கள், 10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள, 714 இடங்கள், அரசு பல் மருத்துவ கல்லூரியில் உள்ள, 84 இடங்கள், 17 சுயநிதி பல் மருத்துவ கல்லூரியில் உள்ள, 937 மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று (5ம் தேதி), சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் துவங்கியது. வரும், 16ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வில், சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட கல்லூரிகளில் உள்ள, 410 கூடுதல் இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முதல் நாளான நேற்று நடந்த கலந்தாய்வில், சென்னை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கூடுதல் இடங்களுக்கு, ஏற்கனவே மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கான, இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில், தங்கள் சொந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் சேர விருப்பப்பட்டு மாணவர்கள் பலர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 808 மாணவர்களுக்கு, இடமாறுதல் கலந்தாய்வில் இடங்கள் கிடைத்தன. அரசு மருத்துவ கல்லூரி, சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.