2047க்குள் 100 சதவீதம் கல்வியறிவு; கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு
கலபுரகி: எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகத்தின் பலனாக 2047-ல் இந்தியா தனது நுாற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும். அதற்குள் நாட்டில் 100 சதவீதம் கல்வியறிவு பெற வேண்டும், என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.குல்பர்கா பல்கலைக்கழகத்தின், 42வது பட்டமளிப்பு விழா, அங்குள்ள பி.ஆர்., அம்பேத்கர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான தாவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார்.வழக்கறிஞர் அர்ச்சனா பிரதீப் திவாரி, சமூக சீர்திருத்தவாதி லட்சுமண் தஸ்தி, விவசாய நிபுணர் லிங்கராஜ பசவராஜப்பா ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.வெவ்வேறு பிரிவுகளில் அதிக மதிப்பெண் பெற்ற, 74 மாணவ - மாணவியருக்கு, 168 தங்க பதக்கங்களும்; 113 மாணவ - மாணவியருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, 29,307 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:நாட்டில் கல்வி அறிவு பெற்றவர்களில், ஆண்களின் எண்ணிக்கை 75 சதவீதம். இதை விட குறைவாகவே பெண்கள் படித்துள்ளனர். கல்வியால் மட்டுமே வெற்றி சாத்தியம். எனவே கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தின் பலனாக 2047-ல் இந்தியா தனது நுாற்றாண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும். இதற்குள் நாட்டில் 100 சதவீதம் கல்வியறிவு பெற வேண்டும்.நாளந்தா உள்ளிட்ட சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவை பார்த்த கண்ணோட்டமே வேறு. இன்று உலகத்தின் நாயகனாக இந்தியாவை சர்வதேச நாடுகள் பார்க்கின்றன. அந்த அளவுக்கு, உலக அரங்கில் இந்தியாவுக்கு தனி பெயர் கிடைத்துள்ளது.உலக பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இதை 3வது இடத்திற்கு கொண்டு வருவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. இது சாத்தியமானால் மட்டுமே நாடு வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், குல்பர்கா பல்கலை துணைவேந்தர் தயானந்தா அகசர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.