2100 ரிசர்வ் சைட்களில் மரங்கள் வளர்க்கலாம்... குளுமையாகும் கோவை!
-நமது நிருபர்-கோவை மாநகராட்சியிலுள்ள, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரிசர்வ் சைட்களில், பல ஆயிரம் மரக்கன்றுகளை வைத்து வளர்த்தால் மட்டுமே, கொதிக்கின்ற நகரத்தை மீண்டும் குளுமையாக மாற்ற முடியும்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில், பல ஆயிரம் லே அவுட்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு லே அவுட்டிலும் 10 சதவீத இடங்கள், ரிசர்வ் சைட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டுக்கான இந்த இடங்கள், மாநகராட்சி வசமே உள்ளன. இவற்றிலும் 250க்கும் மேற்பட்ட இடங்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அல்லது வழக்கில் உள்ளன.இந்த வழக்குகளை விரைவாக நடத்தி, ரிசர்வ் சைட்களை மீட்டு, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கே உள்ளது.பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த, பல நுாறு ஏக்கர் இடங்கள் அனைத்தும், மாநகராட்சி கமிஷனர் பெயரில் தான், வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை மாற்றாமல் இருப்பதால் தான், வில்லங்கச்சான்று பெறும்போது, பொது ஒதுக்கீட்டு இடம் என்று தெரியாமல், பலர் அந்த இடங்களை வாங்குகின்றனர்.இது தொடர்பாக, நமது நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த இடங்களை மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது.நகர ஊரமைப்புத்துறையிடமிருந்து பெற்ற, 1800க்கும் மேற்பட்ட லே அவுட்களின் வரைபடங்களின் அடிப்படையில் கணக்கிட்டதில், 2100க்கும் அதிகமான ரிசர்வ் சைட்கள் இருப்பது உறுதியானது.பெயர் மாற்றம் செய்யும் பணி, இன்னும் முழுமையடையவில்லை. இது ஒரு புறமிருக்க, இப்போது மாநகராட்சி வசமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரிசர்வ் சைட்கள், புதர் மண்டி பயனின்றிக் கிடக்கின்றன.அந்த இடங்களுக்கு வேலி அமைத்து, மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடம் என்பதற்கான அறிவிப்புப் பலகை வைப்பது அவசியம்.கோவையில் வெயில் உச்சம் தொட்டிருக்கும் நிலையில், மரங்கள் வைப்பதன் அவசியத்தை எல்லோரும் பேசத் துவங்கியுள்ளனர். வீடுகளில் மரங்கள் வைத்து வளர்ப்பதுடன், இத்தகைய பொது ஒதுக்கீட்டு இடங்களில் மரங்கள் வைப்பது தான், பெரும் பலனைத் தரும்.கோவை மாநகராட்சி வசமுள்ள இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரிசர்வ் சைட்களில், தலா 50 மரங்கள் வைத்து வளர்த்தாலும் நகருக்குள் ஒரு லட்சம் மரங்களை வளர்க்க முடியும்.இதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக, ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள மாநகராட்சி பூங்கா இடத்தில், ஆறு ஏக்கர் இடத்தில் 700க்கும் மேற்பட்ட மரங்கள் வைத்து, பெரும் சோலையாக உருவாக்கப்பட்டுள்ளது.இதேபோல, ஒவ்வொரு ரிசர்வ் சைட்டிலும் மரங்கள் வைத்து வளர்ப்பதற்கு, சிறப்புத் திட்டத்தை மாநகராட்சி உருவாக்க வேண்டும்; அதற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.காம்பவுண்ட், நீர் ஆதாரம், பராமரிப்பு, பாதுகாப்புக்கான காவலர் நியமனம் என அனைத்துக்கும் நிதி ஒதுக்கி, அதை முறையாகப் பயன்படுத்தி, ரிசர்வ் சைட்களை பசுமைப் பூங்காக்களாக மாற்ற வேண்டும்.கோவை மாநகராட்சி வசமுள்ள ஒன்பது குளங்களின் கரைகளில், அதிகளவு மரங்களை நட்டு வளர்ப்பதுடன், குளங்களுக்குள் தீவுகளை உருவாக்கி, அவற்றில் மியாவாக்கி போன்ற அடர்வனங்களை உருவாக்க வேண்டும்.இதற்கு, கோவையிலுள்ள நிறுவனங்களின்'சி.எஸ்.ஆர்., நிதியைப் பயன்படுத்தலாம்; குடியிருப்போர் நலச்சங்கங்கள், சூழல் அமைப்புகளை இப்பணியில் இணைத்துக் கொள்ளலாம். இவற்றைச் செய்தால்தான், இழந்திருக்கும் பசுமையை மீட்டு, கோவையை மீண்டும் குளுமையாக்க முடியும்!