23வது ஆண்டாக முதலிடம் பெற்று விருதுநகர் சாதனை!
விருதுநகர் மாவட்டம் இந்த ஆண்டும் 10ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. கடந்தாண்டு தேர்வில் 93.69 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு தேர்வில் சில பாடங்களில் 158 மாணவ, மாணவிகள் 100 மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டில் 858 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ராஜபாளையம் மாணவி சாலை அருள்தாய் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன் கூறுகையில், பாடப் பொருளை நன்கு புரிந்து கொண்டும், பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டும் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இடைத்தேர்வுகள் முதல் மூன்று திருப்புத்தேர்வுகள் வரை மாணவர்களின் தேர்ச்சிகள் கணிக்கப்பட்டன. ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து அவர்களை உற்சாகப்படுத்தி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டன. 23வது ஆண்டாக விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது. இந்தாண்டு தேர்வில் ஈரோடு மாவட்டம் 92.75 சதவீதம், துõத்துக்குடி 91 சதவீதம், நெல்லை 89 சதவீதம், மதுரை 89 சதவீதம், தேனி 88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்றார்.