24 மணி நேரமும் செயல்படும் மனநல மையம்: மாணவ, மாணவிகள் ஆலோசனை பெறலாம்
புதுச்சேரி: அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் இலவச மனநல ஆலோசனை மையத்தை தொடர்பு கொண்டு மாணவ மாணவிகள் ஆலோசனை பெறலாம்.கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மொத்தம் 14 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், 5,867 மாணவர்கள், 7,081 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.மதிப்பெண் குறைந்ததால் வேதனை அடைந்த, வில்லியனுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருமாம்பாக்கம் அருகே உறவினர் வீட்டில் தங்கியிருந்த மாணவர், தேர்வில் தோல்வி அடைந்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில், 2 மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நாளை மறுநாள் 10ம் தேதி வெளியாகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 15 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கின்றனர். அதுபோல, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகளும் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வை 7900 மாணவ மாணவிகள் எழுதி உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில், தேர்வு முடிவு தொடர்பான மன அழுத்தத்தில் உள்ள மாணவ மாணவிகள், அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் இலவச மனநல ஆலோசனை தொலைபேசி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரமும் செயல்படும் இலவச மனநல ஆலோசனை மையத்தை 14416 அல்லது 18008914416 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம்.இதுகுறித்து, சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டபோது, தேசிய டெலி - மனநல ஆலோசனை திட்டத்தின் ஒரு பகுதியாக டெலி - மனாஸ் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் குறித்த பயம், மன அழுத்தம் இருந்தால் அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் இலவச மனநல ஆலோசனை மையத்தை டோல்ப்ரீ எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். இரவு, பகல் என 24 மணி நேரமும் ஆலோசனை மையம் செயல்படும். இவ்வாறு, அவர் கூறினார்.