250 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 250 அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் 185 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.நீட் தேர்வு இந்த ஆண்டு மே 5 ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்டத்தில் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலை பள்ளியிலும், திருப்புத்துார் நாகப்பா மருதப்பா பெண்கள் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 185 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறுகின்றனர். மே 4 வரை நடைபெறும் பயிற்சி வகுப்பில் இயற்பியல்,வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடப் பிரிவுகளுக்கு மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த அரசு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.வாரம் தோறும் சனிக்கிழமை மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிய உணவு மாவட்ட நிர்வாகம் சார்பாக வழங்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறலாம்.