ரூ.2.80 லட்சம் சம்பளத்தில் 80 மாணவர்களுக்கு வேலை
கோவை: ஆண்டுக்கு ரூ.2.80 லட்சம் சம்பளத்தில் 80 இன்ஜி., மாணவர்களுக்கு படிக்கும் போதே வளாக நேர்காணல் தேர்வில் வேலை கிடைத்துள்ளது. கோவை அண்ணா பல்கலை பதிவாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள கோவை அண்ணா பல்கலையில், வளாக நேர்காணல் தேர்வு ஆக.,14, 15ம் தேதிகளில் நடந்தது. இதில் ‘கேப் ஜெமினி’ என்ற நிறுவனம் பங்கேற்று மாணவர்களை தேர்வு செய்தது. அண்ணா பல்கலையின் அங்கீகாரம் பெற்ற 38 இன்ஜி., கல்லூரிகளில் இருந்து இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் 1,542 மாணவர்கள், வளாக நேர்காணலில் பங்கேற்றனர்; 147 மாணவர்கள் எழுத்து தேர்வில் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு குழு கலந்துரையாடல் நடத்தப்பட்டதில் 105 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதியில் 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 13 மாணவர்கள், ஈரோட்டில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அன்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.2.80 லட்சம் சம்பளம் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, இன்னும் இரு வாரங்களில் பணி நியமன உத்தரவை, துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் வழங்குவார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.