உள்ளூர் செய்திகள்

ரூ.3 கோடி செலவில் அமைக்கப்பட்ட மாதிரி பள்ளி கட்டிடம் செயல்படுமா?

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி பகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மாதிரி பள்ளி கட்டிடங்கள் பணி முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதி உதவியுடன் மாதிரி பள்ளிகள் கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆங்கில வழிக் கல்வியில் படிக்க விரும்பும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இப்பள்ளி சிறந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதில் படிக்க பலர் ஆர்வம் காட்டுவதால் எழுத்து தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுவரை 2 பொதுத்தேர்வுகளை இப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் ஒன்றியத்தில் விருகாவூர், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் பெரிய சிறுவத்தூர், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சித்தால், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் ஜி.அரியூர் ஆகிய 4 இடங்களில் இப்பள்ளி துவக்கப்பட்டு அப்பகுதி அரசு பள்ளியில் தற்காலிகமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. போதிய வசதி இன்றி இட நெருக்கடியுடன் மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பள்ளிக்கு புதிய கட்டிடம் தலா 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. நிதி வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இடையில் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. விரைவில் திறக்கப்படும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காலதாமதமின்றி விரைவில் கட்டிடத்தை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் சிரமம் இன்றி படிக்க வசதி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்