உள்ளூர் செய்திகள்

3 மாதமாக ஓய்வூதியம் இல்லை பல்கலை பணியாளர் போராட்டம்

தஞ்சாவூர்: கடந்த மூன்று மாதமாக ஓய்வூதியம் வழங்கப்படாததால், தமிழ் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஓய்வு பெற்ற அலுவலர் நிலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. துணை செயலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்று, தமிழ் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், துணைவேந்தரையும் கண்டித்து கோஷமிட்டனர்.சுந்தரலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக உழைத்து, ஓய்வுபெற்ற பணியாளர்கள் 120 பேருக்கு மாதந்தோறும் 1.25 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல், ஓய்வூதியத் தொகை வழங்கவில்லை. இதனால், ஓய்வூதியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து துணைவேந்தர் திருவள்ளுவனிடம் முறையிட்டபோது, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தால் தான் ஓய்வூதியம் வழங்க முடியும், பல்கலைக் கழகத்தில் நிதி இல்லை என கூறி விட்டார்.தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம் எனக் கூறும் தமிழக அரசு, இந்த பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் இருப்பது வேதனைக்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்