350 டன் பாட புத்தகத்தை விற்ற மோசடி; ஒருவர் கைது
கோவை: கோவையில், 350 டன் எடையுள்ள பள்ளி பாட புத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, முதன்மை கல்வி அலுவலக ஊழியர், நேற்று கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 2011ல், சமச்சீர் கல்வி அல்லாத, 350 டன் பழைய பாடத்திட்ட புத்தகங்கள், லாரிகளில் கொண்டு வரப்பட்டன. அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் ஆர்.சி.ஆண்கள் பள்ளி யில் வைக்கப்பட்டு இருந்த, இப்பாட புத்தகங்கள் காணாமல் போனது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாட புத்தகங்களை விற்று பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்படி, முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி, போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சி.இ.ஓ., அலுவலக இளநிலை உதவியாளர் சரவணன், போலீஸ் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்தார். கோவைக்கு நேற்று அவர் வந்த போது, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.